எலும்பு கூடுகள் மீட்பு
20 Aug,2019
அதிர்ச்சியில் உறைந்துள்ள தோட்ட மக்கள் - தீவிர விசாரணைகளில் பொலிஸார்
பொகவந்தலாவையில் எலும்பு கூடுகள் மீட்பு ; அதிர்ச்சியில் உறைந்துள்ள தோட்ட மக்கள் - தீவிர
பொகவந்தலாவ - கொட்டியாகல பகுதியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொகவந்தலாவை - கொட்டியாகலை பகுதியின் தேயிலை தோட்டமொன்றில் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டன. இந்நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது,
பொகவந்தலாவை - கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டு காணமல் போன நபரின் மனைவியினால் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றளிக்கப்பட்டது.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் , குறித்த நபர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கபெறாத நிலையில்,காணாமல் போனதாக குறிப்பிடப்படும் நபரின் வீட்டை சோதனையிடப்பட்டது.
இதன் போது குறித்த நபரின் வீட்டிலிருந்து தொலைப்பேசி கொள்வனவு செய்யப்பட்ட பெட்டியொன்றை பொலிஸார் மீட்டனர். பின்னர் அதிலிருந்த தொலைப்பேசியையே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படும் நபர் பயன்படுத்தியதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பொலிஸார் தொலைப்பேசி ஊடாக விசாரணைகளை ஆரம்பித்தனர். அதற்கமைய தெலைப்பேசியை பிரிதொருவர் பயன்படுத்துவதை அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த தொலைபேசியை பயன்படுத்தி வந்த பெண்ணொருவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ,இந்த தொலைப்பேசி தேயிலை தோட்டமொன்றில் தனக்கு கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸார் அந்த தேயிலை தோட்டத்தை சோதனைப்படுத்திய போது , காணாமல் போனதாக குறிப்பிடப்படும் நபருடையது என கருதப்படும் மனித எலும்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவை - கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெருமால் செல்வம் என்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரின் எலும்புகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புகள் தற்போது பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.