சமீப தலைப்பு செய்தியாக (இப்போதும் கூட..) தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஏதோ நாமலை சொல்ல, பதிலுக்கு நாமல் எழுதி படிக்க, அதில் சாக்கடை மணம் அடிக்க, அதை மையமாக கொண்டு பல செந்தமிழர்கள் மாவையை, நாமல் வைவதை ரசித்து, இருகரம் கூப்பி வரவேற்று, இன்னமும் அதிகமாக எழுத்தாலும், கேலி சித்திரத்தாலும், மாவையையும், கூட்டமைப்பு தலைகளையும் போட்டு தாக்குவது சலிப்பை தருகிறது.
நாமல் எழுதி அனுப்பிய அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது. அவை பற்றி தேட நான் டூ பிஸி. இதற்கெல்லாம் செலவிட என்னிடம் நேரமும் இல்லை.
ஒரு பேச்சுக்கு அவை உண்மை என எடுத்துக்கொண்டாலும் கூட, நாமல் ராஜபக்ச (இவர் யாரென தமிழுலகறியுமே..!) சொல்லப்போய், செந்தமிழர்கள் அதை மையமாக கொண்டு இப்படி தமிழரசு தலைவரை விளாசி நாமலை நியாயப்படுத்துவதை ஏற்க மனம் மறுக்கிறது.
சில நாட்களில், கல்யாணம் செய்ய போகும் நாமலுக்கு இவை யாழ் குழுவாதிகளின் கல்யாண பரிசு போலும்!
யாழ்குடாவை மையமாக கொண்ட கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சீவி, ஈபீடீபி, ஈபிஆர்எல்எப் என்ற தமிழ் கட்சி குழுவாதிகள் மத்தியில், சமூக ஊடகங்களில், செய்தி இணையங்களில், அச்சு ஊடகங்களில், தெருக்களில், அறிவோர் சபைகளில் நிலவுகின்ற குரோதம், பகைமை, சீற்றம், காழ்ப்புணர்ச்சி, கீழ்மை சிந்தனை, சிறுமை சினம், எனக்கு ஒருகண் போனாலும் அவனுக்கு இரண்டு கண் போகிறதே என்ற குரூர மகிழ்ச்சி என்பன என்னை அதிர செய்கின்றன.
“யாழ்ப்பாணத்து தமிழ் கட்சி அரசியலர்” என்று கூற காரணம் உண்டு! இந்த “தமிழ் கட்சி பிஸ்னஸ்” வன்னியில், மலையகத்தில், கொழும்பில், கிழக்கில் உண்டுதான். சண்டையும் உண்டுதான். ஆனால் யாழ் மட்டத்துக்கு குரோதம் இங்கேயெல்லாம் தலைவிரித்தாடி போட்டு பிரிக்கவில்லை.
உண்மையில் சிங்கள பேரினவாத சிந்தனை அரசியலருடன் கூட நா(ம்)ன் தனிப்பட்ட முறையில் குரோதம் பாராட்டுவதில்லை. ஆகவே இந்த தமிழ் குழுவாத சச்சரவுகள் அருவருப்பூட்டுகின்றன.
ஒரு காலத்தில் எம்ஜிஆர், கருணாநிதி உயிருடன் இருந்த உச்ச காலத்தில் இப்படியான ஒரு அரசியல் கலாச்சாரம் தமிழகத்தில் இருந்தது. இப்போது அது அங்கு அந்தளவில் இருந்து குறைந்து விட்டது.
ஒருவேளை இது புலிகள் காலத்தில், கொள்கை முரண்பட்ட இயக்கங்களை தேடியழித்த கலாச்சாரத்தின் தொடர்சியோ?
அது ஆயுதப்போராட்டம். அன்று துப்பாக்கி இருந்தது, போட்டு தள்ளினார்கள். இப்போது டுமீல் இல்லை. இருந்திருந்தால் சிக்காக்கோ அல்லது ஆப்கானிஸ்தான் என கற்பனை செய்வது கஷ்டமில்லை. அது இல்லாத காரணமாகத்தான், இப்போ எழுத்தாலும், கூச்சலாலும் போட்டு தள்ளுகிறார்கள் போலும்.
ஆனால், யோசித்து பார்த்தால், இதற்கு அது பரவாயில்லை போல் இருக்கிறது. ஏனெனில் இது அருவருப்புடன் நாறுகிறது.
நல்லெண்ணத்தில் இனவுணர்வுடன் நாலு நல்லதை நான் சொன்னாலும், "தமிழர்களாகிய நாம் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று படுவோம்" என நான் என் தொண்டை வரண்டு போகும் அளவுக்கு கூச்சலிட்டாலும், இன்று இப்படி அடிவாங்கும் தமிழரசு கட்சி தலைவர் உட்பட கூட்டமைப்பு தலைகளே கேட்பதில்லை. பின் ஏனையோர் கேட்க போகின்றார்களா?
ஆகவே, இனி யாருக்கும் நான் ஒன்றும் அட்வைஸ் செய்ய போவதில்லை. ஒரு சிறு குறிப்பு மட்டும் சொல்கிறேன்.
உங்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விமர்சிக்க உங்களுக்கு முழுமையான உரிமைகள் உண்டு. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், எது செய்தாலும், அதை உங்களுக்குள்ளே வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால், அந்நியன் வந்து நம்மவரை திட்ட, அதை கொண்டாடி, அவனை நியாயப்படுத்தி, விடாதீர்கள்.
தமிழில் வந்ததை இங்கே சிங்களத்தில் மொழி பெயர்த்து சிரிக்கிறார்கள்!