தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துக் கருத்துக் கூறிய போது காஷ்மீரை சுட்டிக்காட்டிய மஹிந்த
11 Aug,2019
வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு முதற்தடவையாக அதுகுறித்து அரசியல் ரீதியில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரசியல் தலைவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவே.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான சாத்தியப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த போது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி பின்வருமாறு கூறியிருக்கிறார்:
'இருவகையான அபிப்பிராயங்கள் தற்போது நிலவுகின்றன. சிலர் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.
வேறு சிலர் சமஷ்டி அடிப்படையிலான ஏற்பாடு ஒன்று வேண்டுமென விரும்புகின்றார்கள். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வே போதுமானது என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள்.
ஆனால் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள். இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டு தான் நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது'.