உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி மொஹம்மட் சஹ்ரான் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (சி.ரி.ஐ.டி.) பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சி.ஐ.டி.க்கு வழங்கியுள்ள வாக்குமூலம் தொடர்பில் ஆழமாக அவதானம் செலுத்துமாறு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், அது குறித்த வழக்கு விசாரணைகளின்போது இந்த கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த வாக்கு மூலத்தில் சஹ்ரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவாக உள்ளதால் அது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி விசாரிக்குமாறு அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி ஆகியோருக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது முதல் சந்தேக நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இரண்டாம் சந்தேக நபரான கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
முதல் சந்தேக நபர் சார்பில் இதன்போது, ஜனாதிபதி சட்டதரணி அனுஜ பிரேமரத்னவும், 2 ஆம் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டதரணி டில்ஷான் ஜயசூரியவும் மன்றில் ஆஜராகினர்.
விசாரணை அதிகாரிகளான சி.ஐ.டி. சார்பில் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் ஹெல உடகே மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜரானதுடன், சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸும் மன்றில் ஆஜரானார்.
வழக்கின் முதலாவது சந்தேகநபரான ஹேமசிறி பெர்னாண்டோவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாகவும், பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் இதன்போது பிரதி சொல்சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் அது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி, முன்னேற்ற அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
வழக்கின் பிரதிவாதிகளுக்கு கடந்த 9ஆம் திகதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பூஜித் ஜயசுந்தரவின் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரிக்கை விடுத்தார். இதன்போது ஹேமசிரி பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் அந்த ஊடக அறிக்கையால் நீதிமன்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஊடக அறிக்கை ஊடாக விமர்சிப்பதானது, பொது மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தும் எனவும் இதனால் அது குறித்து அவதானம் செலுத்துமாறும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் கோரினர்.
இதன்போது அந்த ஊடக அறிக்கையின் நகல் ஒன்றும் நீதிவானுக்கு கையளிக்கப்பட்டது.
அதில் அந்த அறிக்கையை சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் வெளியிடுவதாக கூறப்பட்டாலும் அவரின் பெயர், கையெழுத்து என எதுவும் இல்லாமல் இருப்பது இதன்போது நீதிவானின் அவதானத்துக்கு எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,
தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலில் காணப்படுவதால், ஏதேனும் தகவல் குறித்து விண்ணப்பிக்கும் போது, நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் அதனை வழங்குவதற்கான உரிமை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
எனினும் குறித்த சர்ச்சைக்குரிய ஊடக அறிக்கை தொடர்பில் தன்னிடம் எந்த தகவலும் இல்லை எனவும், அது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் சட்ட மா அதிபரை தெளிவுபடுத்துவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிவானிடம் உறுதியளித்தார். இதனையடுத்து நீதிவான் தனக்கு வழங்கப்பட்ட குறித்த ஊடக அறிக்கையின் பிரதியை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் கையளித்தார்.
இதன்போது மன்றில் கருத்துக்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (சி.ரி.ஐ.டி.) பிரதான பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சி.ஐ.டி.க்கு வழங்கியுள்ள வாக்கு மூலம் தொடர்பில் ஆழமான அவதானம் செலுத்துமாறும் , அதில் சஹ்ரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காடினார்.
நீதிவான் லங்கா ஜயரத்ன, விசாரணையில் பதியப்படும் ஒவ்வொரு வாக்கு மூலம் தொடர்பிலும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் எனவும், விசாரணைகளை துரிதப்படுத்தி நிறைவு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்பபிக்குமாறும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.இதனையடுத்தே இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.