இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு
21 Jul,2019
இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் பல பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவி வருகின்றது.
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலையினால் 9 பேர் காயமடைந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையினால், சுமார் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
நுவரெலியா - ஹட்டன் - அக்கரபத்தனை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த ஒரு சிறுமியின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டதுடன், மற்றொரு சிறுமியின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த பாடசாலை மாணவிகள் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழுந்ததில் 29 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி - சூரியவெவ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் தாய், மகள் மற்றும் மற்றுமொரு சிறுமி என மூவர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வீசிய கடும் காற்றுடன் கூடிய வானிலையினாலேயே இந்த மரம் முறிந்து வீழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அதிக மழையுடன் கூடிய வானிலையினால் ஹட்டன் - கினிகத்தேன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 10 வர்த்தக நிலையங்கள் இந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.
”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது”
விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்
அத்துடன், காலி - ரத்கம பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றுடன் கூடிய வானிலையினால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீரற்ற வானிலையினால் 50 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 1306 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட 99 குடும்பங்களைச் சேர்ந்த 414 பேர் பாதுகாப்பான 14 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடந்த சில தினங்களில் அதிகரித்து காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
களனி, களு, கிங், நில்வலா, கிரிந்திஓய, மாதுறுஒய மற்றும் யான்ஒய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் சற்று அதிகரித்திருந்ததாக நிலையம் குறிப்பிடுகின்றது.
இலங்கை மரண தண்டனை: தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை - சிறிசேன
“காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?” - இலங்கையில் மீண்டும் போராட்டம்
நாட்டின் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்திருந்ததுடன், தற்போது வெள்ள நீர் படிபடியாக குறைந்து வருவதாகவும் இந்த நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையினால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த எச்சரிக்கை இன்றைய தினமும் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் வீசிய கடும் காற்றுடன் கூடிய வானிலையினால் கப்பலொன்று விபத்துக்குள்ளாகி கரையொதுங்கியுள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அந்த கப்பலில் 9 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களை கடற்படையினர் காப்பாற்றியதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
கரையொதுங்கியுள்ள கப்பலை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
இதேவேளை, அதிக காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து, கடற்றொழிலுக்காக சென்ற சுமார் 40-க்கும் அதிகமான படகுகள் சர்வதேச கடல் பகுதிக்குள் திசை மாறி சென்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
சில படகுகள் இந்திய கடல் எல்லைக்குள்ளும், சில படகுகள் மாலைத்தீவு கடல் எல்லைக்குள்ளும் சென்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இந்த மீனவர்கள் தொடர்பான தகவல்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும், நாட்டை சூற்றியுள்ள கடல் பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மலையகம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவும் எனவும், மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.