சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு
                  
                     19 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது.
	குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார்.
	இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன்  ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
	இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.