பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்
                  
                     14 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	
	பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
	கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
	இதற்கு சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.
	தற்போது முதற்கட்டமாக ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
	இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களைக் கொண்ட சிறிய விமானங்களின் மூலம் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
	பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால், அனைத்துலக விமான நிலையமாக இயக்கப்படவுள்ளது.
	தற்போது பலாலி விமான நிலையத்தில் சுமார் 200 பயணிகளைக் கையாளக் கூடிய ஒரே ஒரு முனையம் மாத்திரமே உள்ளது.
	இங்கிருந்து சிறிலங்கா விமானப்படையின் சி-130, ஏ.என்-32, எம்.ஏ-60 போன்ற விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
	ஆரம்பத்தில், சில குறைந்த கட்டண விமான சேவைகள் இந்திய நகரங்கள் சிலவற்றுக்கே ஆரம்பிக்கப்படக் கூடும் என்றும், சிறிலங்கா விமானப்படையே தொடர்ந்தும், விமான நிலையத்தை நிர்வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
	கடந்த ஆண்டு சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தினால், 15,400 வணிக நுழைவிசைவுகளும், 121,000 சுற்றுலா நுழைவிசைவுகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது