அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசியல் தொடர்பில் கொழும்பில் இரகசிய பேச்சு
14 Jul,2019
அமெரிக்க வெளிவிவகார குழுவிலுள்ள சிரேஸ்ட அதிகாரிகள் இருவரான டிரேமியன் டர்ஜ் மற்றும் செல்வா கெசிம் ஆகியோர் இலங்கைக்கு வந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்றைய சகோதர தேசியநாளிதழொன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடலில் அமெரிக்க தூதரக அரசியல் விவகாரம் தொடர்பான பிரதிநிதி மார்கஸ் சர்ஸ்ன்டனும் கலந்துகொண்டுள்ளார்.
அமெரிக்க சோபா பாதுகாப்பு உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதல், இலங்கை தொடர்பில் ஜெனீவா பிரேரணை என்பன தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழுவின் பிரதான அதிகாரிகளான டரஜ் மற்றும் செல்வா கெசிம் ஆகியோர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து அமெரிக்க தூதுவர் செயலகம் தகவல் வெளியிடாது மறைத்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.