யாழில் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் புதிய பௌத்த விகாரை!
                  
                     14 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	
	இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குறித்த விகாரை இன்று சிங்கள மக்களின் சாது என்ற நாமத்துடன் சம்புத்தி சுமண விகாரை திறந்துவைக்கப்பட்டது.
	குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து விகாரைக்கான புனித தாது நேற்று மாலை எடுத்து வரப்பட்டது.
	நாவற்குழி சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும் பௌத்த மத அனுஸ்டான முறைப்படி, தீப்பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
	வடமேல் மாகாணம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு, சாது என்ற நாமம் ஓதப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் மேல் , புனித தாது வைக்கப்பட்டது.
	யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி, முப்படைகளின் தளபதிகள் உட்பட விகாராதிபதிகள் விகாரையின் மேல் புனித தாதுவை வைத்தனர்.
	போர் முடிவடைந்த பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றப் பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
	இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும் அந்த விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.