முன்னாள் காவல்துறை தலைவர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜாமீனில் விடுதலை
10 Jul,2019
மனிதப் படுகொலை குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை – நீதிவான் லங்கா ஜயரத்ன
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயம் பிரகாரம் மரண தண்டனைக் குரிய குற்றமான மனிதப் படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள போதும்,
அவ்வாறு மனிதப் படு கொலைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை என அறிவித்த நீதிவான் அக்குற்றச்சாட்டின் கீழ் வழக்கை முன் கொண்டு செல்ல முடியாது என அறிவித்தார்.
இந் நிலையிலேயே ‘ பொலிசார் கோருகின்றார்கள் என்பதற்காகவோ அல்லது வேறு ஒரு தரப்பின் மனதை சந்தோஷப்படுத்துவதற்காக ஒருவரை விளக்கமறியலில் வைக்க முடியாது என முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வழக்குத் தீர்ப்பொன்றினை முன்னிலைப்படுத்தி சுட்டிக்கட்டிய நீதிவான் லங்கா ஜயரத்ன, ஹேமசிறி, பூஜித் ஆகிய சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க தனக்கு பூரண அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
குற்றவியல் சட்டக் கோவையின் 396,397,398,399 ஆம் அத்தியாயங்களின் கீழான விடயப்பரப்புக்கள் பிரகாரம், இந்த விவகாரத்தில் பிணையளிக்க தான் சட்ட மா அதிபரில் தங்கியிருக்க வேண்டியதில்லை என அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, பிணை சட்டத்தின் கீழ் பிணையை மறுப்பதற்கான எந்த காரணியும் இல்லாததால் பிணையில் செல்ல அனுமதிப்பதாக அறிவித்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்ப்ட்ட விவகாரத்தில், அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிணை தொடர்பில் தீர்மானிக்க அது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போதே இது தொடர்பிலான தனது தீர்ப்பை அறிவித்து நீதிவான் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, சந்தேக நபர்களான ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோர் மன்றில் ஆஜர்செய்யயப்பட்டிருக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நாரஹேன்பிட்டி, பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெறுவதாக சிறைச்சாலை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் கீழ், சட்டத்தரணிகளான சந்துன் கமகே, கிரிஷான் கம்பலகே, இமாரா சேனாதீர, புத்திக ஜயசிங்க, கெளஷல்யா ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆஜராகினர்.
முறைப்பாட்டாளர் தரப்பில் சட்ட மா அதிபரை பிரதி நிதித்துவம் செய்து அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே ஆஜரானதுடன் விசாரணையாளர்களை பிரதி நிதித்துவம் செய்து சி.ஐ.டி.யின் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹெலௌடகே தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.
இந் நிலையிலேயே நீதிவான் லங்கா ஜயரத்ன தனது பிணை குறித்த தீர்ப்பை அறிவித்தார்.