இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமம் - மந்திரி தொடங்கி வைத்தார்
08 Jul,2019
இலங்கையில் விடுதலைப்புலிகள்-ராணுவம் இடையிலான சண்டை முடிந்தவுடன், சண்டையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர் களுக்காகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மாதிரி கிராமங்களை உருவாக்குவதாக இந்தியா அறிவித்தது.
இலங்கையின் வீட்டு வசதி அமைச்சகத்துடன் இணைந்து ரூ.120 கோடி செலவில் இந்த பணி நடந்து வருகிறது. 100 கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 400 வீடுகள் உள்ளன.
இவற்றில், முதலாவது மாதிரி கிராமத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கம்பகாவில் ராணி குடமா என்ற இடத்தில் இந்த மாதிரி கிராமம் அமைந்துள்ளது.
இலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் சந்திரிகா, இந்திய தூதர் (பொறுப்பு) ஷில்பக் அம்புலே ஆகியோர் கூட்டாக இந்த மாதிரி கிராமத்தை தொடங்கி வைத்தனர். முற்றிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுதவிர, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தோட்ட தொழிலாளர்களுக்கும் 60 ஆயிரம் குடியிருப்புகள், இந்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, தொழிற்பயிற்சி போன்ற துறைகளில் 70-க்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.