பொலிஸாரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பதற்றம்
04 Jul,2019
மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பிரதேசத்தில் இன்று (27) காலை போக்குவரத்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற இருவருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைத்துப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர், திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிஸார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இருவர் தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இருப்பினும் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை இனம் தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார்
இதனையடுத்து விபத்தில் காயமடைந்த இருவரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேலதிகமாக இராணுவத்தினர் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.