புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை - ராணுவ தளபதி
24 Jun,2019
இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் பாரிய தொடர்பு காணப்பட வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஒரு நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு அசம்பாவித சம்பவமொன்றும் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், அதனை எவராலும் சரியாக கணிப்பிட்டு கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
போலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவினர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், நாடாளுமன்ற தெரிவுக்குழு என வெவ்வேறாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறு நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்கு இலங்கை இராணுவம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நாட்டில் அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டதுடன், அவசர காலச் சட்டம் மாதாந்தம் நாடாளுமன்ற அனுமதியுடன் நீடிக்கப்படுவது வழக்கமாகும்.
இதன்படி, அவசர காலச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22) ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ள பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படையினர் முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்ட சோதனை சாவடிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி;ன்றமை குறிப்பிடத்தக்கது.