இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம். - மகிந்த ராஜபக்சே
23 Jun,2019
இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.
இன்றைய சூழலில் இலங்கை மக்களுக்கு நாட்டை நேசிக்கும் தலைவர் அவசியம் என குறிப்பிட்ட அவர், இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும் என தெரிவித்தார். எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி எனவும், தன் ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.