இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என்று இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
1980ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் "இஸ்லாமிய தண்டனைகள் ஒழுங்காக அமுல் நடத்தப்படுமாயின் உலகில் குற்றங்கள் அமைவது மிக அரிதாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை" என்று கூறப்பட்டு அதன் கீழ் உள்ள 'குற்றங்களும் தண்டனைகளும்' என்று தலைப்பிடப்பட்ட பட்டியல் ஒன்றில் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆரய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக முன்வந்து சாட்சியமளித்த, ரிஷ்வின் இஸ்மத் என்பவரால் இந்த விடயம் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரிஷ்வின் இஸ்மத், பிறப்பிலிருந்தே முஸ்லிம் என்றதுடன், அவர் 2013ஆம் ஆண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார்.
எந்தவொரு மதத்தையும் தற்போது தான் பின்பற்றாத பின்னணியில் தன்னை கொலை செய்ய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ரிஷ்வின் இஸ்மத்திற்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் மரண அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
'எச்சரிக்கைகளின் பின் கொலை'
'ரித்தத்" என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு தண்டனையாக எச்சரிக்கைகளின் பின் கொலை என்பது தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரித்தத் என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்பது. ஒருவர் இஸ்லாத்தில் இருந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு சென்று விடுவதை 'ரித்தத்" என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையில் புதிய பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடபுத்தகத்திலும் சில பாரதூரமாக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு 'மரண தண்டனை' என்பதற்கு பதிலாக 'கொலை' என பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குரானில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், அது அதீஸ்-இல் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள போதகரான யூசுப் அல் கர்தாரி என்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் "தற்கொலை" என்பதற்கு பதிலாக "தற்கொடை" என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார்.
தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை ஆராய்ந்த தெரிவுக்குழு உறுப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்டுரையின் ஊடாக வார்த்தைகளினால் விளையாடியுள்ளனர் என கூறியிருந்தார்.
ரிஷ்வின் இஸ்மத்திடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு ரகசிய விசாரணைகளையும் நடத்தியிருந்தது.
இலங்கை கல்வி அமைச்சர் பதில்
இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பரப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.
இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்படும் என்ற விதத்தில், பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக பிபிசி தமிழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.