தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை
21 Jun,2019
கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எந்தவித தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.
கல்முனை வடக்கு தமிழ்பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக நான்காம் நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது இன்று அத்துரலிய ரத்தின தேரரும் அவருடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் சென்றிறுந்தனர்.
மேற்படி பிரதேச செயலகம் தரம் உயர்த்து தொடர்பில் இருக்கின்ற சிக்கல் நிலை தொடர்பிலும், சமரசமான முறையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறியும் நோக்கிலும், உண்ணாவிரதிகள் சார்பான குழுவொன்றும் கல்முனை முஸ்லிம் மக்கள் சார்பான குழுவொன்றுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று கல்முனை நகர சபை மண்டபத்தில் வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் ரத்தின தேரர் அகியொரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
இதன் போது இருதரப்பு நியாங்களும் முன்வைக்கப்பட்டது அந்தவகையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பிப்பிலான குழுவினர் தங்களது நியாங்களை முன்வைக்கையில் இந்த பிரதேச செயலகமானது தரமுயர்த்துவதில் எங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லை. அனால் இதில் சில சிக்கல் நிலை நிலவுகின்றது.
அதாவது நிலத்தொடர்பற்று காணப்படுதல், மற்றும் கடைத்தொகுதிகள் பாதிக்கப்படுதல், எல்லை நிர்ணயம் முரண்பாடாக காணப்படுதல், மற்றும் இனத்துவேசத்தினை உண்டுபண்ணுவதாக அமைதல் போன்ற விடயங்களை இதன் போது தங்கள் தரப்பு நியாயங்களாக முன்வைத்திருந்தனர்.
மேற்படி தெரிவிக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த உண்ணாவிரதாரிகள் சார்பாக சென்ற கல்முனை தமிழ் மன்றக் குழுவினர் இவ்விடயங்கள் தொடர்பில் தங்கள் தரப்பு நியாயம் சார்ந்த வகையிலான கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறாக ஒரு மணித்தியாலத்திற்க்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது
இதனை செவிமடுத்திருந்த ரத்தின தேரர் மிகவும் விரைவாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடியுங்கள் உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பேச்சுவார்த்தையானது எந்த தீர்வின்றி இழுபறியில் முடிவடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.