இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
14 Jun,2019
கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.
``நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது'' என்கிறார் கௌரி. ``அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம்'' என்று அவர் கூறினார்.
ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.
``நாங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகத்தான் பார்த்துக் கொண்டோம்'' என்று பி.பி.சி.யின் 'பிரிவினைகளைக் கடந்து' (Crossing Divides) பகுதிக்கு அளித்த பேட்டியில் கூறினார் 29 வயதான ரோஷன். சிதறிவிட்ட பூமியில் மக்கள் ஒன்று சேருவது பற்றிய நிகழ்ச்சி அது``ஆனால், இப்போது திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் காதலின் அடையாளம் தான் எங்களுடைய மகள்'' என்று ரோஷன் கூறினார்.
எனவே, வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், குட்டி மகள் செனுலி சமல்காவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கான மாற்றத்தை ஏற்படுத்தியது எது?