மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
09 Jun,2019
மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். பின்னர், அங்கு நடைபெறும் மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதனையடுத்து, சிறிசேனா அளிக்கும் மதிய விருந்தில் மோடி பங்கேற்கிறார். பகல் 1.35 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
2.05 மணிக்கு இலங்கைவாழ் இந்தியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பின்னர் 3 மணிக்கு கொழும்புவில் இருந்து இந்தியா திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.