முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள்
09 Jun,2019
(
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
நிற்க,
பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.
அதுபோக,
இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும்,
குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு (கி.பி. 140 - 150 இல்) தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-
அத்தோடு,
கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும், இரண்டாம் பதிப்பு, இஸ்லாமிய புக் ஹவுஸ், கொழும்பு, பக்.4)
இன்னும்,
இலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் "பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)