பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வற்புறுத்தியதாக பூஜித் சாட்சியம்!
07 Jun,2019
பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வற்புறுத்தியதாக பூஜித் சாட்சியம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாக கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்து இரவு 8 மணிக்கு சந்திக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த விசாரணைக்குழுவிடம் சென்றாலும் நான் குற்றவாளியாவேன் என்றும் ஓய்வூதியம் இன்றி வீடு செல்கின்றீர்களா அல்லது தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுகிறீர்களா என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் சாட்சியம் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி இதனை மிகவும் தயவுடன் கூறியதாகவும் சுமார் நான்கு முறை இது பற்றி வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தன்னிடம் இருந்த ஆவணங்களை ஜனாதிபதிக்கு காண்பித்ததாகவும் அவற்றை ஜனாதிபதி மிகவும் உன்னிப்பாக பார்த்ததாகவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தனது 35 ஆண்டுகால பொலிஸ் சேவையில் தனது பெயரை கெடுத்துக்கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான் திருடன் இல்லை எனவும் கொள்ளைக்காரன் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தான் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி அழைப்பொன்றை விடுத்து பதவி விலகல் கடிதத்தை வழங்காதது தொடர்பில் கோபமாக விசாரித்ததாகவும் தன்னை 29ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்புவதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரை காட்டிக்கொடுக்க முடியாத காரணத்தால் தான் பதவி விலகவில்லை என தெரிவித்த பொலிஸ் மா அதிபர், ஈஸ்டர் தாக்குதலை பொறுப்பேற்று பதவி விலகினால் அரசாங்கத்தில் உயர் பதவியோ தூதுவர் பதவியோ வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.