ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பிக்குகள் செல்வாக்கு
05 Jun,2019
நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர்
முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றஞ்செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விழைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் பௌத்த பிக்குகள் வற்புறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்களை நீக்கும் அளவுக்கு அரசியலில் பௌத்த சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துவிட்டது என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் உண்ணாவிரதங்கள், கோரிக்கைகள் எவையும் இதுவரையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் கணக்கில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
புத்த பிக்குமாரின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் பேராபத்தான ஒரு நிலைமையினை தோற்றுவித்துள்ளதுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமது நிரபராதி தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு பதிலாக மதவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அழிவுகளை பறைசாற்றி நிற்கின்றது என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்