முஸ்லிம்களை சீண்டினால் ஸ்ரீலங்காவே அழிந்துவிடுமாம்; சிங்கள அமைச்சர்
05 Jun,2019
சிறிலங்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களை அழிக்க முயற்சித்தால் ஒட்டுமொத்த நாடுமே அழிந்துவிடும் என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச எச்சரித்திருக்கின்றார்.
அதேவேளை நாட்டில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மாதிரிக் கிராமத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 195 ஆவது மாதிரிக் கிராமமான கணபதிபுரம் கிராமத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.
கணபதிபுரம் மாதிரிக் கிராமத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாச அங்கு இடம் பெற்ற வழிபாடுகளிலும் கலந்து கொண்டதோடு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்கு தலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததோடு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமைகள் தொட ர்பிலும் தனது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினார்.
‘நாம் இன்று மிகவும் தீர்மானம் மிக்கதொரு காலப்பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றோம். எமது நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையிலான முக்கியமான காலப்பகுதியில் தற்போது பயணிக்கின்றது. இந்த முக்கியமான காலப்பகுதியினுள் நாடு எனும் ரீதியில் மனிதத்துவத்தைப் போற்றி மனிதத்தை ஆளச்செய்யும் பலம்மிக்க தேசமொன்றினை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம். எமது சக்தியினை நாம் பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். மிகச் சிறிய அளவிலான அந்த தீவிரவாத வலயத்தை நாம் தேடி அழிக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு இனத்தை அழிக்க முற்படக் கூடாது. மாறாக தீவிரவாதிகளையே அழிக்க வேண்டும். தவறியேனும் இந்த அடிப்படைவாத, கடும்போக்குவாத சூழ்ச்சிதாரர்களின் பிரதமர் கனவு, ஜனாதிபதி கனவு ஆகியவற்றை நிறைவேற்றும் கூட்டத்தின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஒரு இனத்தை தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தும் நிலைமையொன்று ஏற்படுமானால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியான ஒரு நிலைமை இடம்பெற்றால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டமான இஸ்லாமிய தேசத்தை எமது பிராந்தியத்தில் உருவாக்க நாமே துணைபோய்விடுவோம்.
சிறிலங்காவில் தலைதூக்கியுள்ள அடிப்படை மதவாத பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சிறுபான்மையின சமுகமான முஸ்லிம் சமுகத்தை அழிக்க முற்படும் நடவடிக்கைகள் அனைத்தும் உலகில் ஒரேயொரு சிங்கள பௌத்த நாடாகத் திகழும் சிறிலங்காவுக்கே அழிவை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சஜித் எச்சரிக்கின்றார்.
சிங்கள – பௌத்த மக்களின் காவலர்கள் என்றும் தேசப்பற்றாளர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த அழிவை எவராவது மேற்கொள்வார்களானால் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் எமது சிங்கள பௌத்த இராச்சியத்துக்கு நாம் மேற்கொள்ளும் பாரிய துரோகமாகும் என்றும் அமைச்சர் சஜித் பிறேமதாச குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டின் மீது பாசம் இருக்குமாயின் இனம் மதம் மீது அக்கறையிருக்குமாயின் தீவிரவாதிகளைத் தேடி அவர்களை இல்லாதொழிக்க வேண்டும். எனினும் ஒரு இனத்தை இலக்கு வைத்து அந்த இனத்தை அழிக்க வேண்டும் என மோசமான எண்ணத்துடன் நாம் செயற்பட்டால் அந்த இனம் மட்டுமல்லாது முழு நாடுமே அழிவடைந்துவிடும். அதுவே உண்மையான நிலையும் கூட. தீவிரவாதிகள் யார் என்பதை நன்கு அறிந்து அவர்களை நாம் இல்லா தொழிப்போம். தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் மரண தண்டனையை விதிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு வேறு தீர்வுகள் இல்லை. ஆகையினால் தீவிரவாதிகளுக்கான ஒரே தீர்வு மரண தண்டனையாகும். எனினும் தீவிரவாதிகளுக்கு வழங்கும் மரண தண்டனையை ஒரு இனத்தையோ மதத்தையோ இலக்கு வைத்து நடைமுறைப்படுத்த முற்படுவோமாயின் அது எமது சிங்கள பௌத்த இராச்சியத் துக்கு நாம் மேற்கொள்ளும் பாரிய நம்பிக்கைத் துரோகமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஊடாக சிறிலங்காவில் தலைதூக்கியுள்ள அடிப்படை மதவாத தீவிரவாதம் உட்பட அனைத்து தீவிரவாதத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் சஜித் வலியுறுத்தினார்.
இதற்கு முதலில் இனவாதத்தையும் மதவாதத்தையும் வகுப்புவாதத்தையும் தூண்டி குறுகிய அரசியல் லாபம் தேட முற்படும் அரசியல்வாதிகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்து ள்ளார்.
இயலாமையுடன் இருக்கும் அரசியல்வாதிகளே அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்றார்கள். இந்த கேவலமான முறைமைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலுக்கு வேலை செய்ய முடியாத சோம்பேறிகள் தேவையில்லை. அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியாத நபர்கள் அரசியலுக்கு அவசியமில்லை. அரசியலில் இருக்க வேண்டுமானால் நித்திரைகொள்ளாது விழித்திருக்க வேண்டும்.
மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களுக்காக வெயிலில் இருக்க வேண்டும். மழையில் நனைய வேண்டும். எந்தவொரு சவால்களையும் முகம்கொடுக்கக்கூடிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும். அதனால் இனவாதத்தையும் மதவாதத்தையும் வகுப்புவாதத்தையும் தூண்டி அரசியல் நடத்தும் கேவலமான அரசியலை இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். அதற்கு முதலில் நாட்டில் வாழும் அனைவரும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும். அதன்ஊடாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.