தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டம்
01 Jun,2019
அதுரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியளவில் இப்போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களதும் விருப்பமாகுமெனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் குறித்த விடயங்களை உள்ளடக்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழேந்திரன் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட்டை பதவி விலக்க கோரி இரண்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) தொடர்கின்றது.
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, அதுரலிய ரத்தன தேரர் நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மேலும் அடிப்படைவாதத்திற்கு ஆதரவளிக்கும் சில அரசியல்வாதிகளே மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் விதமாக தகவல் வெளியிட்டு வருவதாகவும் அதுரலிய ரத்தன தேரர் இதன்போது குற்றம் சுமத்தினார்
இத்தகைய அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்ததொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலேயே தான் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அதுரலிய ரத்தனதேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேலும் சில பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.