இலங்கை அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தில் ஆடைக் கட்டுப்பாடு
31 May,2019
இலங்கையில் அரச ஊழியர்கள் பணிநேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான உத்தரவினை, அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் விடுத்துள்ள சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெண் ஊழியர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணிய வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சீருடை அணிய பணிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், அந்த சீருடையில்தான் கடமைக்கு வரவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச சேவையிலுள்ள பெண் ஊழியர்கள் கர்ப்ப காலத்தில் தங்களுக்கு வசதியான ஆடைகளை அணிந்துவர சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், சமய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொள்வதற்கு யாரும் விரும்புவார்களாயின், அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட ஆடைகளை அணிந்து, அதன் பின்னர் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும், முழு முகத்தையும் தெளிவாக அடையாளம் காணக் கூடிய விதத்திலும் மேலதிக ஆடை அணிகலன்களைப் பயன்படுத்தலாம் எனவும் அரசாங்கம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, அரச நிறுவனங்களுக்குள் சேவைகளைப் பெறுவதற்காக வருவோரும், தம்மை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்து வர வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.