இலங்கையில் அரபு மொழிகளில் பெயர் பலகையா ?
28 May,2019
சிறிலங்காவில் அரபு மொழிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதையும், தனியான ஆட்சியொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி இல்லாதொழிக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை பயங்கரவாத, அடிப்படைவாத மற்றும் கடும்போக்குவாத கருத்துக்களை பரப்பி சமூகங்களுக்கிடையில் குரோதத்தையும், மோதல்களையும் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை காப்பாற்றும் – நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் சிங்கள பௌத்த மதத் தலைமை பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் சம்பிக்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
250 க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பலியெடுத்த ஈஸ்டர் தின தாக்குதல்களை அடுத்து நாட்டில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய தயாரித்துள்ள நாட்டை காப்பாற்றும் – நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தை மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கும் முகமாக இன்றைய தினம் அவர் கண்டிக்கு விஜயம் செய்திருந்தார்.
இதற்கமைய முதலில் அஸ்கிரிய பீடத்திற்கு சென்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அஸ்கிரி மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், நாட்டின் நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன், தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.
இதனையடுத்து மல்வது பீடத்திற்கு சென்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க மல்வது மகாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அவரிடமும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கெலைத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடியதுடன் தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக்கூறினார்.
அதேவேளை ராமான்ஞய பீடத்திற்கும் சென்ற அமைச்சர் ராமாஞ்ய பீட மகாநாயக்கர் நாபான்னு பிறேமசிறி தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்ததுடன், நிரந்தர சட்டமொன்றின் ஊடாக பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக நாட்டில் இருந்து ஒழித்து சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொண்டிருக்க முடியாது. நிரந்தர சட்டமொன்றின் ஊடாக பயங்கரவாத நடவடிக்கை, அடிப்படைவாதம், குரோத பிரசாரங்களை முன்னெடுக்கும் யாராகவும் இருக்கலாம், அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளாக இருக்காலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைபோல் வேறு ஆட்சியொன்றை அல்லது சமூகமொன்றை முன்னெடுத்து செல்லும் ஷரியா பல்கலைகழகங்கள், புர்கா போன்ற ஆடைகள், அரேபிய மொழியில் பெயர் பலகைகள் ஆகியவற்றின் ஊடாக வேறான ஆட்சியை முன்னெடுத்து செல்வதனை உடனடியாக சட்டத்தின் ஊடாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனைபோலவே அப்பாவியான மக்களின் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதற்கு எதிராக அது முஸ்லிம்களாக இருக்கலாம் வேறு இனத்தவர்களுடையதாக இருக்கலாம். சொத்துக்களை சேதப்படும் நபர்களை ஒழித்து சமாதானமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி – பிரதமர் -எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பாதுகாப்பு சபைக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் யோசனை முன்வைத்தோம். ஜனாதிபதி – பிரதமர் -எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் பங்கேற்கும் வகையில் இன்று பாதுகாப்பு ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டுள்து மகிழ்ச்சியளிக்கின்றது. முன்னோக்கி செல்ல கட்சி பேதங்கள் தேவையில்லை. எஞ்சியுள்ள சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றில் அனைவரினதும் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.