கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் படையினர் பாரிய தேடுதல் – 100 பேர் கைது!
26 May,2019
ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்றுவரை 4 நாட்கள் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் முதல் 3 நாட்களில், பாதுகாப்புப் படையினர் 87 பேரை கைது செய்துடன் அவர்களை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளினால் கடந்த ஏப்ரல் மதம் 21 ஆம் திகதி நடப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றது.
இதனை அடுத்து தலைநகர் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முப்படையினர் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சில போலியான செய்திகள் பரப்பட்டு இன கலவரம் ஏற்பட நூற்றுக்கணக்கான முஸ்லீம் உடைமை கடைகள், வீடுகள் மற்றும் மசூதிகள் அழிக்கப்பட்டன. அத்தோடு ஒருவரும் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவசரக சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுந்தார். இதில் இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.