பகலில் நம்பிக்கையில்லா பிரேரணைஸ.இரவில் ரிஷாத்துடன் உரையாடல்!
24 May,2019
எதிர்க்கட்சியினர் பகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர். இரவில் எதிர்க்கட்சி தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வாறீர்களா என்று கேட்கின்றார் என இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அதற்கான ஒரு உண்மையான காரணம் இருக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பகலில் எதிர்க்கட்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருகின்றனர்.
இரவில் எதிர்க்கட்சி தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வாறீர்களா என்று கேட்கின்றார்.
வந்தால் உங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என்கிறார். இவர்களின் நிலைமை இவ்வாறு கீழ்தரமானதாக உள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனை நேரடியாக கூறியுள்ளார்.
உண்மையில் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது உண்மையென்றால் ஏன் அதில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிடவில்லை.
எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் நாம் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்க மாட்டோம். அதேபோல் நல்லவர்களை தண்டிக்க இடமளிக்கவும் மாட்டோம்.
இப்போது நாம் அமைத்துள்ள தெரிவுக்குழுவில் அமைச்சர்கள் ஆளுநர்கள் என அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கவுள்ளோம் என்றார்.