இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு
20 May,2019
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிக்கா என இரட்டை குடியுரிமையை வைத்துக்கொண்டு கோத்தபய ராஜபக்சே அரசியலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், “நான் நீண்டகாலமாக யோசித்து அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுக்கு செய்துள்ளேன்.
அதனால் தான் என்னுடைய அமெரிக்க குடியுரிமையையும் விட்டு கொடுத்து விட்டேன். இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தேர்தலில் எனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள மாட்டேன்.
தேர்தலுக்கும், அதற்கும் சம்பந்தம் கிடையாது. அந்த சம்பவம் என்னை மிகவும் கவலை அடைய செய்தது” என்றார்.