இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா? - விக்கி
20 May,2019
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே என்ற போதும், சிங்கள பௌத்த குழுக்கள் இதனை சாட்டாக வைத்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம், இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று ஏனையவர்களுக்கு காட்ட முனைகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அல்லது கிறிஸ்தவ சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள். இந்த சம்பவத்தில் பௌத்த சிங்கள மக்கள் இறந்ததாக நான் அறியவில்லை.
இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அவதானித்ததில் முஸ்லிம் பயன்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களுகாக அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பௌத்த சிங்கள குழுவினர் சிலரே தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மக்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஆகவே இது எதை காட்டுகின்றது என்றால் இவ்வாறான வன்முறை நிகழ்வு வரும் நாம் அவர்களுக்கு இப்படி செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டங்கள் போட்டு வைத்து அதன் அடிப்படையில் செயற்படுகின்றனரோ என யோசிக்க வேண்டியிருக்கின்றது.
ஏனெனில் 1983 களில் நடைபெற்ற ஓர் சம்பவத்திற்காக திட்டமிட்ட வகையில் பொரளையில் இருந்து அங்கிருந்த தமிழர்கள் விபரங்களை எடுத்துக் கொண்டு அவர்களை தாக்கினார்கள். வெள்ளவத்தையில் கூட தமிழர்கள் பெயரை கூறி அவர்களை தாக்கினார்கள். இதே போலவே தற்போதும் எந்த பாதிப்பினையும் சந்திக்காத சிங்கள பௌத்தர்கள் இதனை ஓர் காரணமாக வைத்து முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
இதன் ஊடாக இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர். அதற்காக நாம் முஸ்லிம் தீவிரவாதிகளை ஒன்றும் செய்யக் கூடாது என கூறவில்லை. ஆனால் அவர்களை ஓர் காரணியாக வைத்து சாதாரண முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.