தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் மனைவிக்கு குழந்தை பிறந்தது!
17 May,2019
உயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடத்திய 9 பேரில் அலாவுதீன் அகமது முவாத் (22) ஒருவர். இவர் கொழும்புவின் புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இவர் சட்ட கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட 9 பேர் மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முவாத்தின் தந்தை அகமது லெப்பே அலாவுதீனிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், ‘சட்ட மேற்படிப்பிற்காக இலங்கை வந்தான். 14 மாதங்களுக்கு முன்பு அவனுக்கு திருமணம் ஆனது. கடந்த மே 5 ஆம் திகதி அவனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக ஏப்ரல் 14 ஆம் திகதி தான் அவனை பார்த்தேன்’ என தெரிவித்தார்.
இதற்கிடையில் முவாத் எழுதிய கடிதத்தில், ‘என்னை யாரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் முவாத் இறந்த பின்னரே குடும்பத்தாருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.