உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்
15 May,2019
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
சேவையின் அவசியம் கருதி பிரதிக்காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் இயங்கிய நிலையில் பின்னர் காவல்துறைமா மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவருக்கு கீழ் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டார்
பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , வாக்கு மூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதத்தில் வந்த 70 வயதுடைய பெண்ணொருவரை இராணுவத்தினர் சோதனையிட்ட போது அவருடைய உடமையில் இலத்திரனியல் பொருட்கள் இருந்தன. அதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாண காவல்துறையினரிடம்இராணுவத்தினர் கையளித்தனர்.
குறித்த பெண்ணை காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த பெண் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர் எனவும் , யாழ். மானிப்பாயில் உள்ள தனது பிள்ளையின் வீட்டுக்கு வந்ததாகவும் , அதன் போது பேரப்பிள்ளைகளுக்காக ரிமோட் கார் , அதற்கான ரிமோட் மற்றும் பற்றரிகள் உள்ளிட்ட இலத்திரனியல் விளையாட்டு பொருட்களை கொண்டு வந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து குறித்த பெண்ணிடம் வாக்கு மூலத்தை பெற்றபின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.
எமது கருத்தை பொருட்படுத்தாது அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது - மகாநாயக்க தேரர்கள்
நாட்டின் மகாநாயக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.
அஸ்கிரிய பீடத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் , அமரபுர பீடத்து மாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இராமாண்ய பீடத்து மாநாயக்கர் நாபால பிரேமசிறி தேரர் ஆகியோரின் கையெழுத்துடன் தேரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது அவர்களின் வாக்குகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகளில் ஈடுப்படுவதன் விளைவுகளையே இன்று நாடு அனுபவிக்கின்றது . நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்துவது ஆளும் கட்சியினதும், எதிர்கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் இவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக அந்த பொறுப்பிலிருந்து மீறி செயற்படுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இது சிங்கள பௌத்தர்களின் நாடல்ல என குறிப்பிட்டிருப்பது வன்முறையை ஊக்குவிக்க கூடும். இந்நிலைமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.