வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்
12 May,2019
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதனையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி மற்றும் வைத்தியசாலையினை சூழவுள்ள வீதி அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் உட்செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு வழமையினை விட அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் புதிதாக ஓர் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன்,வவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாதையின் இரு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி வவுனியா மின்சாரசபை வீதியின் ஆரம்ப பகுதியிலும் முடிவு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.
மேலும், வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லும் அனைத்து பயணிகளினதும் பொதிகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்திய பின்னரே பேரூந்து நிலையத்தினுள் உட்செல்ல அனுமதியளிக்கின்றனர். மேலும் புகையிரத நிலைய வீதி மற்றும் சுற்றுவட்ட வீதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
வவுனியா நகரினுள் தேவையற்ற விடயத்திற்கு செல்ல வேண்டாமெனவும் தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாள அட்டையினை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை போன்ற இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்ற கடித்தினையடுத்தே இப்பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.