அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது இதனை பின்பற்றுங்கள்- மனித உரிமை ஆணைக்குழு
10 May,2019
இலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பொதுமக்களிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கும் அவசரகால சட்டம் முக்கியமானது என்பது குறித்து கேள்வி எழுப்பவில்லை என அதன் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனைவரினதும் உரிமைகளையும் கலாச்சார மத உணர்வுகளையும் மதிக்கும் விதத்தில் அவசரகால சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கருதுகின்றது என தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு நடைமுறைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நபர் ஒருவரை கைதுசெய்யும் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகளாக பின்வரும் விடயங்களை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
கைதுநடவடிக்கையில் ஈடுபடும் நபர் தன்னை தனது பதவியை கைதுசெய்யப்படும் நபரிடம் அல்லது அவரது உறவினரிடம் உறுதிசெய்யவேண்டும்.
கைதுசெய்யப்படும் நபர்கள் அனைவரிற்கும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டும்.
கைதுசெய்யும் நபர் கைதுசெய்யப்படுபவரின் குடும்பத்தவரிற்கு அதற்கான ஆவணத்தை வழங்கவேண்டும்.
குறிப்பிட்ட ஆவணத்தில் கைதுசெய்யும் நபர் இடம் நேரம் உட்பட முக்கிய விடயங்கள் காணப்படவேண்டும்.
கைது செய்யப்படுபவர் அந்த ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும் மேலும் தான் கைதுசெய்யப்படும் இடம்நேரம் உட்பட முக்கிய விடயங்களை அதில் பதிவு செய்யவேண்டும்.
கைதுசெய்யப்பட்டவர் பயன்படுத்தும் மொழியிலேயே அந்த ஆவணம் காணப்படவேண்டும்.
குறிப்பிட்ட ஆவணத்தை வழங்கமுடியாத பட்சத்தில் கைதுசெய்யபவர் பொலிஸ் உத்தியோகத்தராகயிருந்தால் தகவல் குறிப்பேட்டில் ஏன் அந்த ஆவணத்தை வழங்கவில்லை என்ற தகவலை பதிவு செய்யவேண்டும்.
நபர் ஒருவர் குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் முன்னிலையில் கைதுசெய்யப்படாத பட்சத்தில் அந்த நபர் குடும்பத்தவர்கள் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
கைதுசெய்யப்படும் நபரை வெளிப்படையாக பார்வைக்கு தெரியும் விதத்தில் வாகனங்களில் அழைத்துசெல்லவேண்டும்.
வாகனங்கள் உட்பட கைதுசெய்யப்படும் நபரிடமிருந்து சொத்துக்கள் ஏதாவது பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்தவுடனோ அல்லது 24 மணித்தியாலத்திற்குள்ளோ அது குறித்த விபரங்கள் அடங்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை குறிக்கும் ஆவணத்தை குடும்பத்தவர்கள் உறவினர்களிடம் வழங்கவேண்டும்.
கைதுசெய்யப்பட்ட நபரை சோதனையிடும்பொது அவரின் கௌரவத்திற்கு மதிப்பளிக்கவேண்டும்.பலவந்தத்தையோ வன்முறையையோ பயன்படுத்தக்கூடாது அந்த நபரின் அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்கவேண்டும்.
கைதுசெய்யும் நடவடிக்கையின் பொது கைதுசெய்பவர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.கைதுசெய்யப்படுவதை நபர் ஒருவர் எதிர்த்தால் ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்தலாம்.
கைதுசெய்யப்படும் நபரிற்கு காயங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் அவமானப்படுத்தும் செயற்பாடுகள் தண்டனைகள் ஆகியன குற்றச்செயல்கள் என்பதுடன் தடை செய்யப்பட்ட விடயங்களாகும்.