தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்
09 May,2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (08) பிற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை ரொஷான் மகேஷன் உள்ளிட்ட திருத்தந்தையர்களால் வரவேற்கப்பட்டார்.
கொடிய பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தையர்களுக்கும் பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகள் ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.