பொலிஸார் எச்சரிக்கை
08 May,2019
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில், புதுவிதமான வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம், மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்துள்ளது. இளைஞர்களின் விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி அந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது. இது தொடர்பில் இளைஞர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.
அதே போன்று திருநெல்வேலியை அண்டிய பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு வழிமறித்து அவரது தொலைபேசி மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். அது தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாவடி உப்புமட பகுதியில் வீதியில் சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வழிமறித்து தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து கொண்டு , அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். முதியவர் அடையாள அட்டையை காண்பிப்பதற்காக தனது பணப்பையை எடுத்த போது அதனை அவர்கள் பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறான வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என்றும், இதுவரை இரண்டு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கிடைக்க பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , மோட்டார் சைக்கிள் இலக்கம் ஒன்றினை அடையாளம் கண்டு கொண்டோம். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த இலக்கம் தென்பகுதியை சேர்ந்தவரின் பெயரில் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது அவை போலியான இலக்க தகடாக இருக்கலாம் என நம்புகின்றோம். குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரித கதியில் முன்னெடுத்து வருகின்றோம். குற்றவாளிகளை மிக விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர்.