பறக்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும்
08 May,2019
இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி பறக்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என விமானப்படைப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இலங்கை வான்பரப்பில், ஆளில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென்றும் தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும் விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், ஆளில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியிலும், காங்கேசன்துறை பகுதியிலும் ட்ரோன் கருவிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அவற்றின் மீது படையினரும் பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். எனினும் அவை தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.