“புலிகள் என தமிழர்களை பார்த்ததுபோல் பயங்கரவாதிகள் என முஸ்லிம்களை பார்க்க வேண்டாம்”
08 May,2019
விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார்.
இதில் அவர் கூறுகையில்.
இந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல இது சர்வதேச பிரச்சினை, இந்த பிரச்சினை குறித்து பின்னணி தெரியாது பலர் பேசுகின்றனர். கண்மூடித் தனமாக இந்த பிரச்சினை குறித்து பேசுகின்றனர். ஆகவே இது குறித்து அனைவரும் முதலில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
இன்று பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பின் நாட்டினை மீட்டுள்ளோம் என்பதே உண்மை. இப்போதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் பலர் சந்தேகநபர்கள். இதுவரை நேரடிக் குற்றத்தில் சிலர் தொடர்புபட்டுள்ளனர்.. இவர்களின் 12 முக்கியமான பயங்கரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பல பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்கு பிரதான பயங்கரவாதிகளினால் ஒரு நபரிடம் 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுதுறையினால் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 15 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணை வெற்றிகரமாக முன்னகர்கின்றது.
இன்று நாட்டுக்குள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 150க்கும் குறைவான பயங்கரவாத நபர்கள் உள்ளதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்கான ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 83 கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவ நம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகால யுத்தத்தை உருவாக்க காரணமாக அமைந்தது.
ஆகவே இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம். அதேபோல் எமது பாதுகாப்பு படைகள் மற்றும் எமது புலனாய்வு குறித்து நம்பிக்கைவைத்து செயற்பட வேண்டும். பாதுகாப்பு படைகளுக்கு நான் அதிகாரம் கொடுத்துள்ளேன். நான் இன்று முழுமையான அதிகாரங்களை இராணுவத்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் தமது கடமையை சரியாக செய்து வருகின்றனர். புலனாய்வு, பாதுகாப்பு படை, பொலிஸ் துறையை புனர்நிர்மாணம் செய்து வருகின்றேன். கடந்த காலங்களில் பொலிஸ் துறைக்கு அதிகாரம் வழங்கவில்லை. நான் இவற்றை பொறுப்பேற்ற பின்னர் மாற்றியமைத்தேன். எவ்வாறு இருப்பினும் இன்று பாதுகாப்பு படைகள் பலமாக உள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகலரும் கைதுசெய்யப்படுவார்கள்.