நீதிபதிகள் தவறிழைத்தால் முறைப்படி முறையிடவும்: அசாத் சாலிக்கு தலதா பதில்
07 May,2019
நீதிபதிகளின் செயற்பாடு தவறாக காணப்பட்டால் அதுகுறித்து தம்மிடமும் பிரதம நீதியரசரிடமும் முறையிடுமாறு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் நீதியமைச்சர் தலதா அத்துகோரள கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைவிடுத்து கமராக்களுக்கு முன் சென்று ஊடகங்களிடம் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதிபதியொருவர் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளாரென அசாத் சாலி நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட கருத்திற்கு பதிலளித்துள்ள நீதியமைச்சர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.
நீதிபதிகள் தவறிழைத்ததாக ஊடகங்களிடம் தெரிவிப்பது முறையற்ற செயற்பாடென தெரிவித்துள்ள நீதியமைச்சர், அது சகல நீதிபதிகளையும் பாதிக்குமென கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நீதிபதிகளின் செயற்பாட்டில் திருப்தியில்லை என்றால் அதுகுறித்து உரிய முறையில் முறையிடுமாறும், குற்றங்கள் நிரூபணமாகும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை நீதிபதிகளின் சுயாதீனத்தன்மை, வெளிப்படை மற்றும் திறமையின் அடிப்படையில் உள்நாட்டில் மட்டுமன்றி உலகளவில் நன்மதிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள நீதியமைச்சர், ஆளுநரின் விமர்சனம் கண்டனத்திற்குரியதென கூறியுள்ளார்.