நீர்கொழும்பு சம்பவம் இன மோதலல்ல : இருவருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை – சந்தேகத்தில் இருவர் கைது
07 May,2019
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போரதொட பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர, மதுபோதையில் இருநபர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு குழு மோதலாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதசாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அவை பாரியளவில் மேற்கொள்ளப்படவில்லை. எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கபடவில்லை. அத்தோடு இந்த முரண்பாடுகளில் கூரிய ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போரதொட பகுதிகளில் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.
பொலிஸ் மற்றும் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சோதனை நடவடிக்கைகளின் பலனாகவே இவ்வாறு ஆயுதங்கள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சோதனை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோதல் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸார் விரைந்து செயற்பட்டு முரண்பாடுகள் தீவிரமடையாமல் தடுத்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், பிரதேச அமைதியைப் பேணுவதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டது.
விஷேடமாக நீர்கொழும்பு கட்டான மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதுதொடர்பிலும் விசாணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்