மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – விசாரணைகளுக்கு புலனாய்வாளர்கள்
06 May,2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
எனினும், அவர் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி, “தி ஹிந்து” நாளிதழிடம் தெரிவித்தார்.
“இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, இந்த பிராந்திய வலையமைப்புகள் குறித்து, சிறிலங்கா விசாரித்து வருகிறது.
சஹ்ரான் 2018 பிற்பகுதியில் பெங்களூரு, காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வெளியில் உள்ள அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கலாம்.
அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்று எமக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் அங்கு யாத்திரிகர்களாக செல்லவில்லை.
பலர் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
குண்டுத் தாக்குதல்களுக்கு TATP அல்லது triacetone triperoxide வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மிகவும் சிக்கலான குண்டுகள் அல்ல.
அவர்களில் இருவர் சலகை இயந்திர நேரக்கணிப்பு பொறிகளை வைத்திருந்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரிகள் இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி இவற்றை உள்ளூரில் தயாரித்திருக்கலாம்.
அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் தொடர்ந்தும் உயர்ந்தபட்ச விழிப்பு நிலையில் உள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய அதிகாரிகள், இந்தியாவில் சஹ்ரானின் நடமாட்டங்களை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ‘தி ஹிந்து’விடம் தெரிவித்திருந்தனர்.
விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்
எவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு இயல்பு நிலை மீளக் கொண்டு வரப்படும்.
தேர்தல்களைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல்களுக்கு முன்னதாக, உறுதியான நிலையை நான் ஏற்படுத்துவேன். தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிப்பேன்.
தீவிரவாத அமைப்புகளின் செயற்பாட்டு நிலையில் உள்ள உறுப்பினர்களை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இன்னும் 25 தொடக்கம் 30 வரையான செயற்பாட்டு நிலை உறுப்பினர்களே வெளியில் உள்ளனர். ஆனால் அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளா என்பது உறுதியாகவில்லை.
இந்த தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்பு தொடர்புபட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு அந்த அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.
அமெரிக்காவின் எவ்பிஐ மற்றும் அனைத்துலக காவல்துறை உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் சிறிலங்காவின் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.
இது சிறிலங்காவுக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. இது ஒரு பூகோள தீவிரவாத அமைப்பு.
அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற முன்னேறிய நாடுகளால் கூட, ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி முன்னரே அறிந்திருந்தால், பொருத்தமான நடவடிக்கையை எடுத்திருப்பேன். வெளிநாட்டுக்கு சென்றிருக்கமாட்டேன்.
இந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரிடியாகும். சுற்றுலாத்துறையை பெரிதும் பாதித்துள்ளது.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, சுற்றுலாத்துறை மீண்டும் தாக்குதல்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்