கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு
04 May,2019
ஆனால் ஒன்பது மாகாணங்களிலும் பகிர்ந்து குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் மைத்திரிக்குக் கடிதம்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையினால், ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரி கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வவுனியாவில் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உதவியளித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வெளியேற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.
இதனால், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் ஆதரவுடன் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கட்டடம், செட்டிகுளம் மெனிக்பாம், பத்தினியார் மகிழங்குளம் பிரதேசங்களிலுள்ள அரச கட்டடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், வவுனியாவில் அவர்களைக் குடியேற்ற வேண்டாமெனவும் அது மேலும் பல இன வேறுபாடுகளை உருவாக்குமெனவும் குறிப்பிட்டு , நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
எனினும் ஆளுநர் சுரேன் ராகவன், சுமந்திரன் ஆகியோர் அந்த அகதிகளை வவுனியாவில் குடியமர்த்த அனுமதித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அரச கட்டங்களில் குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் கேட்டுள்ளார்.
எனினும் அவர்களை வவுனியாவில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு மாதமும் தலா இருபதாயிரம் ருபாய் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.