சஹரானின் மரணம் குறித்து சந்தேகம்
04 May,2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை ஜஹ்ரானே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஜஹ்ரானும் இன்னொரு தற்கொலை குண்டுதாரியும் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் ஆனால் ஜஹ்ரான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஜஹ்ரான் குண்டொன்றை பொருத்தியிருக்கலாம் அல்லது தொலைவிலிருந்து அதனை வெடிக்க வைக்கலாம் என அதிகாரிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சங்கிரிலாலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபரின் தோற்றத்திற்கும் ஜஹ்ரானின் புகைப்படங்களிற்கும் இடையி;ல் வித்தியாசங்கள் உள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜஹ்ரான் ஐஎஸ் அமைப்பின் ஆதரவை பெற்றதுடன் தற்கொலை குண்டுதாரிகளிற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக கடும்பாடுபட்டமை என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜஹ்ரான் தனக்கு பின்னர் தனது அமைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு எவரையும் நியமிக்கவில்லை எனவும் விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜஹ்ரான் தனது அமைப்பின் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு தற்கொலை குண்டுதாரியாக மரணிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஜஹ்ரான் உயிருடன் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஜஹ்ரான் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.