இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ
04 May,2019
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக செயற்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கும், யுத்தக் காலத்தில் கடமையாற்றிய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இடையில் கடந்த 28ஆம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு பிரிவினரினால், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் பிரதி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு பணிக்குழுவின் மூத்த அதிகாரி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் போலிஸ் மாஅதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர், இந்த குழுவினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு
இதற்கிடையே மன்னார் - சாந்திபுரம் பகுதியிலிருந்து பெருந்தொகை சீ-4 வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிப்பொருளுடன் நேரத்தை கணிப்பிடும் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 12 கிலோகிராம் சீ-4 வெடிப் பொருளும், நேரத்தை கணிப்பிடும் 12 கருவிகளுமே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலீஸ் விசேட அதிரடிபடையினர் நடத்திய சுற்றி வளைப்பின் போதே இந்த வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வெடிப் பொருட்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை விசேட அதிரடி படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சாந்திபுரம் வனப் பகுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பாரிய தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து, இலங்கை முழுவதும் பாரிய சோதனை நடவடிக்கைகள் தினமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.