புர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம்
02 May,2019
முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக விசனம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதல்களையடுத்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தம் செய்யப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. குண்டுத் தாக்குதல்களின் விளைவாக தங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று பல முஸ்லிம்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் மதக்காரணங்களுக்காக முகத்தை மூடும் ஆடையை அணிகின்ற பெண்களை இலக்குவைத்து விதிக்கப்பட்டிருக்கும் தடை அந்த பெண்கள் அவமதிக்கப்படக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கலாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி பணிப்பாளர் தினுஷிகா திசாநாயக்க கூறியிருக்கிறார்.
" அந்தப் பெண்கள் வெளியில் நடமாடமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க நிர்ப்பந்திக்கப்படுவர். வேலைக்கோ, படிக்கவோ செல்லமுடியாமல் போகலாம்.அடிப்படை வசதிகளையும் அவர்கள் பெறுவதில் கஷ்டங்களை எதிர்நோக்கவேண்டி வரலாம். முகத்தை மூடும் ஆடைமீதான தடைவிதிப்பு பாரபட்சத்துக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு அந்த பெண்களுக்கு உள்ள உரிமையையும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச்சுதந்திரம் ஆகியவற்றையும் மீறுவதாக இருக்கிறது " என்று திசாநாயக்கா கூறினார்.
நியாயபூர்வமான பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசியம் ஏற்படும்போது அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சோதனைகளை நடத்தலாம். மனித உரிமைகளுக்கு இணங்க அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது முக்கியமானதாகும்.
பெண்களுடைய மத நம்பிக்கைகள் எவ்வாறானதாக இருந்தாலும் எத்தகைய உடையை தாங்கள் அணியவேண்டும் என்று தீர்மானிப்பதற்கான உரிமை பெண்களுக்கு இருக்கிறது. முகத்தை மூடும் ஆடையை அகற்றுமாறு பெண்களை வலுக்கட்டாயமாக கேட்பது அவர்களை அவமதிப்பதாகும்.அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திசாநாயக்கா குறிப்பிட்டார்