இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹசிமின் தந்தை மற்றும் 2 சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கூறும்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 130 பேர் இலங்கையில் இந்த தாக்குதலை நடத்திவருவதாக தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரும், போலீஸ் அதிரடிப்படையினரும் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் கிழக்கு மாகாணம் கல்முனை நகரில் சாய்ந்தமருது என்ற இடத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ராணுவத்தினரும், போலீசாரும் வெள்ளிக்கிழமை இரவு அங்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கியுடன் இருந்த 2 பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும், போலீஸ் படையினரும் திருப்பி சுட்டனர். அவர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
திடீரென அந்த வீட்டுக்குள் 3 முறை குண்டுகள் பயங்கரமாக வெடித்தன. சிறிது நேரத்தில் ராணுவத்தினர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகளும், துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 2 பேரும் இறந்து கிடந்தனர். வீட்டுக்குள் மொத்தம் 5 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் உடல்கள் இருந்தன.
வீட்டுக்குள் நடத்திய சோதனையில் அதிக அளவில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. ஏராளமான டெட்டனேட்டர்கள், சில துப்பாக்கிகள், தற்கொலைப்படைக்கான கருவிகள், ராணுவ சீருடைகள், ஐ.எஸ். இயக்க கொடிகள் ஆகியவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளிலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதுமே ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் கல்முனை, சாவலகடே, சம்மாந்துறை ஆகிய இடங்களில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். கொழும்பில் ஓட்டல்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் பயங்கரவாதி ஜக்ரான் ஹசிம் ஆவான். கல்முனையில் நடைபெற்ற சண்டையில் அவனது தந்தையும், இரு சகோதரர்களும் கொல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. இவர்களும் கொழும்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
போலீசார் சுட்டுக் கொன்ற மூன்று பேரில் ஒருவர் ஹசிமின் தந்தை முகமது ஹசிம், அவருடைய மகன்கள் ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் என போலீஸ் மற்றும் உறவினர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், நம்பிக்கை இல்லாதவர்கள் மீது நாம் போர் தொடுக்க வேண்டும் என பேசியுள்ளனர். ரில்வான் ஹசிம் ஜிகாத்திற்கு அழைப்பு விடுக்கும் வீடியோவில் குழந்தைகள் அழும் சத்தமும் கேட்கிறது என போலீஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.