இந்தியா தேசிய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என மகிந்தா ராஜபக்சே
28 Apr,2019
இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை செய்தது. மூன்று முறை இந்தியா எச்சரிக்கையை அனுப்பியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை செய்யாத காரணத்தினால் மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்தடுத்த நகர்வுகளை கணித்து இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உளவுத்தகவல்களை வழங்கி வருகிறது. ஐ.எஸ், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர். இதனால் இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ளவும் தீவிரம் காட்டுகிறது.
ஏனென்றால் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹாசிம், இலங்கை, தமிழகம், கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் இப்பகுதியில் இஸ்லாமிய அரசை நிருவ போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளான். கேரளா, தமிழகத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் உஷார் நிலையில் நகர்வுகளை ஆய்வு செய்கிறார்கள். கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் சிக்கிய தகவலின் அடிப்படையிலே இலங்கைக்கு எச்சரிக்கையை விடுத்தோம் என்கிறது தேசிய புலனாய்வு பிரிவு. இதனால் இலங்கைக்கு செல்ல இந்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய புலனாய்வு பிரிவு அனுமதி கோரலாம் என தகவல் வெளியாகியது.
தேசிய பாதுகாப்பு படைகள் வேண்டாம்
இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசியுள்ள முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, இந்தியா உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு வெளிநாட்டு படை வீரர்கள் தேவையில்லை. எங்களுடைய படைகளே போதுமானது. நாங்கள் அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும்தான் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்