யாழில்.வாள் முனையில் கொள்ளை ; 4 கடைகளில் கைவரிசை
28 Apr,2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காலப்பகுதியில் யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ். நகரை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் குறித்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் வர்த்தகரை அச்சுறுத்தி வியாபர பணம் 8 ஆயிரம் ரூபாயினை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
அங்கிருந்து தப்பி சென்றவர்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் பிறவுன் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்தும் வியாபர பணம் 10ஆயிரம் ரூபாயினை கொள்ளையடித்து சென்றனர்.
அங்கிருந்து சென்றவர்கள் சற்று தொலைவில் இருந்த மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றனர். அதன் போது கடையில் மூவர் நின்ற போதிலும் அவர்கள் வாளினை காட்டி மிரட்டியதனால் , கடையில் நின்றவர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
அங்கிருந்து சென்றவர்கள் நான்காவதாக ஒரு வர்த்தக நிலையத்துக்குள் புகுந்த போது அங்கு வாடிக்கையாளர்கள் குழுமி நின்றமையால் தமது கொள்ளை முயற்சிகளை கைவிட்டு தப்பி சென்றனர்.
குறித்த கொள்ளை சம்வத்தில் ஈடுபட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்க தகடுகள் மறைத்து கட்டப்பட்டு இருந்ததுடன் கொள்ளையர்கள் தமது முகங்களை கறுப்பு துணிகளால் மூடி கட்டி தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.