39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை
26 Apr,2019
இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நேற்று மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் இருந்து 40 கி.மீ. தொலைவில் புகோடா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு பின்னால் உள்ள காலி நிலத்தில் குண்டு வெடித்தது. நல்லவேளையாக, அப்போது அங்கு யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து 39 வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா சலுகையை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறுகையில், 'நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. இருப்பினும், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நடக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு அளித்து வந்த வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.