வீட்டு நாய்களை வீதியில் விட தடை:யாழ்-மாநகர முதல்வர்
19 Apr,2019
யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை பராமரிக்கவேண்டும் மாறாக வீதிகளில் திரிய விட்டால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் மாநகரசபை பிடிக்கும் என மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறும் இதனை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாநகர மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகின்றது.
அதன் பின்னர் வீதிகளில் நடமாடித்திரியும் கட்டாக்காலி நாய்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி யாழ் மாநகரசபையினால் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன்.
எனவே மேற்குறித்த தீர்மானத்தை தங்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்து மாநகரசபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என அறிவித்துள்ளார்.