கனடாவிலிருந்து வந்தவர் விபத்தில் பலி
16 Apr,2019
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் (66) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று விட்டு திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் (14) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.